×

திருவேங்கடவனும் தொண்டைமானும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்தவர் தொண்டைமான் சக்கரவர்த்தி. திருவேங்கடவன் மீது அளவில்லாத பக்தியும், அன்பும் வைத்திருந்தார். கனவில்கூட மறவாது திருமால் நாமத்தை உச்சரிப்பதே தன் பிறவிக் கடன் என நினைத்து வாழ்பவர். காஞ்சிபுரம் தொடங்கி பல பகுதிகளை ஆண்டவர். தனக்குத் துன்பம் ஏற்படும்போது, மலையப்பன் திருவடிகளை இறுகப் பற்றி, பலரின் ஆலோசனை கேட்டு, அதன்படி ஆட்சி செய்யக்கூடியவர்.

இவரின் ஆட்சிக்காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். திருப்பதி என்னும் திருமலை தேவஸ்தானத்தை கட்டியதும், இந்த தொண்டைமான் சக்கரவர்த்தியே ஆவார். தொண்டை மண்டலத்தில், தன் ஆட்சியின் கீழ் வேதம் ஓதும் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கூர்மன். முதுமைக் காலத்தில் பிணி பற்றியதால், உள்ளத்தில் மரணபயம் உலுக்கி எடுத்தது. தன் மகனை அருகே அழைத்து, `நான் எந்த நேரத்திலும் உன்னைவிட்டு பிரியலாம். எனக்கு சக்தி இருக்கும் பொழுது எம்பெருமானுக்கு செய்ய வேண்டிய கைங்கரியம் செய்து வந்தேன்.

அதன் பலனாக நல்ல மகன், மருமகள் பேரப்பிள்ளைகளை எம்பெருமான் எனக்குத் தந்தார். நானும் மகிழ்வுடன் வாழ்ந்தேன். இப்பொழுது எனக்கு அந்திமாகாலம் நெருங்கிவிட்டது. என் உயிர் பிரிந்தால், என்னுடைய ஈமச்சடங்கு முடித்ததும், என் அஸ்தியைக் கொண்டு புனித கங்கையில் கரைக்க வேண்டும். கயாவில் பல்குனி ஆற்றில் குளித்து, பிண்டம் இடவேண்டும். இதுவே என் இறுதியாசை மகனே. நீ.. இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும்’.

என மரண படுக்கையில் படுத்திருந்த தந்தை, தன் மகனிடம் கடைசி விருப்பத்தைக் கூறினார். அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். சில நாட்களில் கூர்மன் மறைந்தார். அவருடைய அஸ்தியைக் கரைக்க காசிக்குப் புறப்படத் தயாரானான். ஆனால், தன் மனைவி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமே என எண்ணினான். அதற்கு உரியவர் பேரரசர் தொண்டமான் சக்கரவர்த்தி எனக் கருதினான்.

நேராக அரசசபைக்குச் சென்றான். காவலாளியிடம், மன்னரைக் காண அனுமதிகேட்டு விண்ணப்பத்தைத் தெரிவித்தான். காவலாளி, மன்னரிடம் சென்று அனுமதிகேட்டார். அவரும் அனுமதி வழங்கினார். அரசரைக் காண அரண்மனைக்குள் சென்று, `வாழ்க தொண்டைமான் சக்கரவர்த்தி. வாழ்க.. வாழ்க..’ என வாழ்த்துக் கூறினான். `மன்னா, என்னுடைய தந்தை கூர்மனின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடைய அஸ்தியை கரைக்க காசிக்குச் செல்ல வேண்டும். ஆகவே, என் மனைவி மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்றார்.

`உன் மனைவி மக்களை என் பாதுகாப்பில் விட்டுவிட்டு, நீ.. காசியாத்திரை செல். திரும்பி வந்ததும் உன் குடும்பத்தை அழைத்துச் செல்லலாம். அதுவரை என் பாதுகாப்பில் இருக்கட்டும்’ என்று உறுதி அளித்தார் சக்கரவர்த்தி.மன்னரின் சொல்கேட்டு மனம் மகிழ்ந்தான் அந்தணன். பின்னர், தன்னுடைய குடும்பத்தை அரசரிடம் ஒப்படைத்துவிட்டு, காசி பயணத்தை மேற்கொண்டார். அந்தணர் குடும்பத்தைப் பாதுகாக்க, பொறுப்பைத் தன்னுடைய அமைச்சரை அழைத்து, `புனித யாத்திரை சென்றவனின் குடும்பத்தை நீ பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து பராமரித்து கவனித்து வரவேண்டும்’ என ஆணையிட்டார்.

அமைச்சரும் அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டார்.சுமார் 2 மாதம் கடந்து அந்தணன், அஸ்தியை கரைத்துவிட்டு, தன் தந்தை சொல்படி முடித்து, சந்தோஷத்தோடு தொண்டை மண்டலத்தை அடைந்தார். தன் குடும்பத்தை அழைத்துச் செல்ல மன்னரை நாடினார். பல வேலைகளில் ஈடுப்பட்டுவந்த மன்னருக்கு, அப்பொழுதுதான் நினைவு வந்தது. அந்தணர் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உறுதி அளித்தோமே! என்று உடனே அமைச்சரை வரவழைத்து, அந்தணர் குடும்பம் பற்றி விசாரித்தார். அமைச்சரும் வருத்தத்துடன், `மன்னரே.. நான் சரியாக கவனிக்கவில்லை. எல்லையை காப்பாற்றும் பணியில் மூழ்கிவிட்டேன்’ என்று கூறியதும், மன்னர் அதிர்ச்சி அடைந்தார்.

அந்தணர் குடும்பம் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார், மன்னர். அங்கு அவர் கண்ட காட்சி இதயத்தையே நடுநடுங்க வைத்தது. அங்கே அந்தணர் குடும்பம், பசியால் வாடி உடல் இளைத்து இறந்து கிடந்தனர். மன்னர் செய்வது அறியாது துடிதுடித்தார். `வாக்கு தவறிவிட்டோமே, தன் குடிமக்களை பொறுப்புடன் கவனிக்கவில்லையே’… என்று கதறினார். அவர்கள் இறப்பிற்கு தானே காரணம் அழுதுபுலம்பினார்.

அக்கணம், மன்னருக்கு சட்டென ஒரு எண்ணம் உதித்தது. நான் வேண்டும் வேங்கடவன் இதனை நிச்சயம் சரிசெய்து, என்னையும் இந்த நாட்டு மக்களையும் காப்பார். என பெரும் நம்பிக்கையோடு, அந்த இடத்தைவிட்டு வேகமாக அரண்மனைக்கு வந்தார். அங்கே தன் குடும்பத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அந்தணரைப் பார்த்து, `அந்தணரே! இப்போதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக, உன்னுடைய மனைவி மக்கள் எல்லாரையும் திருப்பதிக்கு அனுப்பி இருக்கின்றேன். இன்னும் சில நாட்களில் அவர்கள் திரும்பி வந்து விடுவார்கள். அப்படி அவர்கள் வந்தவுடன் உன்னிடம் ஒப்படைக்கின்றேன்’. என்று கூறி அவரை அனுப்பிவிட்டு, தவறிழைத்துவிட்ட குற்ற உணர்வுடன் உடனே மலையப்பரைக் காணத் திருப்பதிக்கு ஓடினார், மன்னர்.

தொண்டைமான், இறைவனிடத்திலே சென்று, `மலையப்பா… உன்னைத்தான் நம்பியிருக்கின்றேன். இது என்ன சோதனை. என் நாட்டு மக்களை நான் பாதுகாக்கத் தவறிவிட்டேனே! இது தவறல்லவா?’ என்று மன்றாடி இறைவனிடத்திலே மனமுருகி கேட்டார். என்னால் தவறு ஏற்பட்டதற்கு நானே பொறுப்பு இறைவா.. உன் திருவடிகளை வணங்கி கேட்கிறேன். அவர்களை உயிர்மீட்டு எனக்குத் தரவேண்டும்’ என வேண்டினார். மன்னரின் மனவருத்தத்தையும், நியாயமான முறையையும் அறிந்து மலையப்பர், மன்னரிடம் அசரீரியாக பேசத் தொடங்கினார்.

`சக்கரவர்த்தி, நீ.. இப்படி இறந்தவரை உயிர்ப்பித்துக் கொடு, என்று கேட்பது முறையாகுமா? சற்று யோசித்துப் பார். உன்னிடத்தில் ஒப்படைத்தவர்களை, நீ… பாதுகாக்க வேண்டாமா? உன்னுடைய மெத்தனப் போக்கினால் இரண்டு உயிர்களும் போய்விட்டனவே. இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டார்.

`மலையப்பா.. எந்தப் காரியங்களை நான் செய்வதற்கும் முன்பாகவும்சரி, பின்பாகவும் சரி. உன்னையே நம்பி இருப்பேன். நம்பி இருப்பவர்களை கைவிடுவது முறையா? நீயே.. கூறு. என்னுடைய மக்கள் நன்றாக இருக்க வேண்டும்’ என்று அழுதழுது அவர் திருவடிகளை வணங்கினார், தொண்டைமான்.

மனமுருகி வேண்டிய மன்னருக்காக, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொடுத்து, `இப்புனித தீர்த்தத்தை இறந்தவர்களின் மீது தெளித்தால் அவர்கள் உயிர்பெற்று எழுவர்’ என்று கூறி கொடுத்தார், வேங்கடவன். அந்த மகிமை வாய்ந்த தீர்த்தத்தைப் பெற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, மீண்டும் தன்னுடைய நாட்டிற்கு திரும்பினார். இறந்த அந்தணனின் மனைவி, பிள்ளை ஆகியோரை பாதுகாப்பாக வைத்திருந்த அறையில் மன்னன் உள்ளே சென்றான். அங்கு இறந்துகிடக்கும் அவர்களின் மீது தீர்த்த நீரைத் தெளித்தார். மலையப்பஸ்வாமி கூறியதை போலவே, இறந்தவர்கள் உயிர்த்தெழுந்தனர்.

பின்னர், அந்த குடும்பத்தை அழைத்துக் கொண்டு, வேங்கடவன் நடத்திய அதிசயத்தை அந்தணரிடம்கூறி, மனைவி மக்களை ஒப்படைத்தார், மன்னர்.இதுபோல, தெய்வத்திடம் பேசுகின்ற ஆற்றலும், சக்தியும் சக்கரவர்த்திக்கு வரத்தொடங்கியது. மனமார இறைவனைத் துதித்து, அவரோடு மனம் ஒன்றி இருந்தால், இறைவன் நிச்சயமாக நம்முடனும் பேசுவார், என்பதற்கு தொண்டைமான் சக்கரவர்த்தி ஓர் உதாரணம்.

தொகுப்பு: பொன்முகரியன்

The post திருவேங்கடவனும் தொண்டைமானும் appeared first on Dinakaran.

Tags : Thiruvenkatavan ,Tontaiman ,Thondaiman Chakravarty ,Thondaiman ,
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...